உள்ளூர் செய்திகள்

தமிழை ரசிக்க தெரியாத இளைய தலைமுறை: ஞானசம்பந்தம் வருத்தம் கு.ஞானசம்பந்தம் வருத்தம்

சென்னை: சென்னையில் நடந்து வரும் புத்தகக் காட்சியின் நான்காம் நாள் நிகழ்வில், விருந்தும் மருந்தும் எனும் தலைப்பில், கு.ஞானசம்பந்தம் பேசினார்.சில புத்தகங்களை படிக்கும் போது மனம் மகிழும். இது தான் விருந்து. நம் குழப்பங்களுக்கு புத்தகங்கள் விடை தரும்.அது தான் மருந்து என, தன் தலைப்பிற்கு விளக்கமளித்து, அவர் தொடர்ந்து பேசியதாவது:படிக்க வேண்டுமெனும் ஒத்த சிந்தனை உடைய, இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசவே பேச்சாளர்கள் விரும்புகின்றனர். காரணம், பல பள்ளி, கல்லுாரிகளில் பேசும்போது, 'சிலேடை' பேசினால் அதை அவர்களால் ரசிக்க முடியவில்லை.ஏனெனில், அவர்களுக்கு தமிழின் அருமையும், சுவையும் தெரியவில்லை. ஆங்கில மோகம் மட்டுமே உள்ளது.மதத்தை பரப்ப வந்த வீரமாமுனிவரும், ஜி.யு.போப்பும், தமிழின் அருமையறிந்து, தமிழுக்கு தொண்டாற்றி வளம் சேர்த்தனர். ஆனால், தமிழுணர்வு இன்றைய தலைமுறையிடம் குறைந்து வருவது, நம் துரதிர்ஷ்டமே.கலைஞனை விட, ரசிகன் அதிகம் யோசிக்க வேண்டும். அப்போது தான் சிறந்த படைப்புகள் வெளிவரும்.சிறந்த பேச்சென்பது, எத்தனை முறை பேசியதையே பேசினாலும், கேட்க துாண்ட வேண்டும். அதுபோல, சிறந்த படைப்பென்பது, ஆண்டுகள் கழித்து படித்தாலும், நம்மை அசைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்