உள்ளூர் செய்திகள்

தொலைதூரக் கல்வி மூலம் கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பில் சான்றிதழ், பட்டயப் படிப்புகள்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் (NIOS) இணைந்து, தொலைதூரக் கல்வி வழியாக கால்நடை பராமரிப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். தொடக்கத்தில், கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகளும், உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு, அடுமனை மற்றும் மிட்டாய் தயாரிப்பு ஆகியவற்றில் இரண்டு பட்டயப் படிப்புகளும் வழங்கப்பட உள்ளன. பாடங்கள் தமிழில் தயாரிக்கப்படுகின்றன. கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் சான்றிதழ் படிப்பில் சேர அனுமதி வழங்கப்படும்.மேலும், NIOS மூலம் 14 வயதுக்கு மேற்பட்டோர் 10-ம் வகுப்பு, 15 வயதுக்கு மேற்பட்டோர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதலாம். 2 மொழிப்பாடங்களும் 3 முதன்மைப் பாடங்களும் தேர்ச்சி பெற்றால், அது தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் தேர்வுக்கு இணையாகக் கருதப்படும். தேர்வுகள் பொதுவாக ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகின்றன; அதே நேரத்தில், மாணவர்கள் விரும்பும் மாதம், நாளிலும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும்.தமிழ்நாட்டில் தற்போது 277 கல்வி நிறுவனங்கள், 151 தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் 93 திறந்த நிலை அடிப்படை கல்வி மையங்கள் செயல்படுகின்றன. மொத்தம் 31 துறைகளில் 86 தொழிற்பயிற்சி படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்