குழந்தை மேம்பாட்டுக்கு சிறந்த சேவை திருச்சூர் கலெக்டருக்கு விருது கலெக்டரின் தாயாருக்கும் கவுரவம்
திருவனந்தபுரம்: கேரளாவில் குழந்தை மேம்பாட்டு திட்டத்தில் சிறப்பான சேவை புரிந்ததற்காக கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கலெக்டரான நெல்லையை பூர்வீகமாக கொண்ட அர்ஜுன் பாண்டியனுக்கு விருது வழங்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளரான அவரது அம்மாவும் கவுரவிக்கப்பட்டர்.கேரளாவில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் குழந்தை மேம்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட கலெக்டர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு விருதுக்கு திருச்சூர் கலெக்டர் அர்ஜுன் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.திருச்சூர் மாவட்டத்தில் 18 அங்கன்வாடிகளுக்கு கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளுக்கு நிலம் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.அங்கன்வாடிகளை மையமாகக் கொண்டு குழந்தைகள், பெரியவர்கள் இடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க ஒரு திட்டம் துவங்கப்பட்டது.பள்ளி மாணவர்கள் கலெக்டரை தொடர்பு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான திட்டம், மாணவர்களிடையே விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கும் திட்டம், பழங்குடியின குழந்தைகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக இந்த விருதுக்கு அர்ஜுன் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அர்ஜுன் பாண்டியனுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 26 ஆண்டுகளாக இடுக்கி மாவட்டம் ஏலப்பாறை பகுதியில் அங்கன்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அர்ஜுன் பாண்டியனின் தாய் உஷாகுமாரியும் கவுரவிக்கப்பட்டார்.அர்ஜுன் பாண்டியனின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் ஆகும். தோட்டத் தொழிலாளியான இவரது தந்தை பாண்டியன் பல ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குடியேறினார்.