உள்ளூர் செய்திகள்

தேர்வு எழுத அனுமதி கோரி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனு

இதுகுறித்து, டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கலெக்டர் வீர ராகவ ராவிடம் அளித்துள்ள மனு விவரம்: "நாங்கள் கடந்த, 2011-12ம் கல்வியாண்டில், டி.டி. மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர்ந்தோம். இதற்காக, ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும், பல லட்சம் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. நாங்கள் தேர்வு எழுத, எம்.ஜி.ஆர்., பல்கலை அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து, 2012 ஆகஸ்ட் முதல் தேதியன்று நாங்கள் தேர்வு எழுதினோம். இதற்கான, தேர்வு முடிவுகள் 2012 நவ., 21 ல் வெளியிடப்பட்டன. ஆனால், அப்போது, நாங்கள் எழுதிய தேர்வுக்கான முடிவுகள் மட்டும், நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரியில், தனித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 39 பேர் விண்ணப்பித்தனர். ஆனால், ஒரு மாணவர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, எங்கள் கல்லூரியின் தலைவர், தீனதயாளு நாயுடுவிடம் கேட்டதற்கு, அவர், உரிய பதில் அளிக்கவில்லை. மேலும், எங்கள் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கழகம் அங்கீகாரம் அளிக்கவில்லை எனக் கூறி, பல்கலை சார்பில், ஒவ்வொரு மாணவருக்கும், தனித் தனியாக கடிதம் அனுப்பியது. இக்கடிதம் அனைத்தும், கல்லூரியின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. கல்லூரி நிர்வாகம், இந்தக் கடித விவரத்தை எங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆக., 2012ம் ஆண்டு எங்களை தேர்வு எழுத அனுமதித்த எம்.ஜி.ஆர்., பல்கலை, 2013ம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்காதது ஆச்சரியமாக உள்ளது. அத்துடன், பல்கலையின் துணைவேந்தர், பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களுடைய கல்லூரியின் நிர்வாகத்தை அணுக வேண்டும் என, கூறியுள்ளார். எங்களுடைய கல்லூரி தலைவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளும் தலைமறைவாகி விட்டனர். கல்லூரி அலுவலகத்தில், ஒரு ஊழியர் கூட இல்லை. இந்நிலையில், நாங்கள் யாரை அணுகுவது, இதுகுறித்து, பல்கலையிடமும் தெரிவித்து விட்டோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இவ்விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு, எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்." இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்