அரசுப் பள்ளி மாணவர்களின் பேருந்து பயணம்: இரவு வரை காத்திருக்கும் அவலம்
நாமக்கல்: எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளி முடித்து பஸ்சில் பயணம் செய்யும், ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப.வேலூர் அடுத்த பிள்ளைக்களத்தூர், கரட்டூர், வில்லிபாளையம், சங்கநாயக்கர்பட்டி, குச்சிபாளையம், சுக்காரம்பட்டி காலனி, சுக்கக்காரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாக்கவுண்டம்பாளையம், திண்டமங்கலம், அண்ணாநகர், நோட்டக்காரன்குட்டை, எர்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பரமத்தி, சுக்கக்காரம்பட்டியில் இருந்து எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சைக்கிள் மற்றும் பஸ்களில் பள்ளிக்கு வருகின்றனர். அரசு பஸ்சில் செல்லும் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வசதி இருப்பதால் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துக்காக காத்திருந்து அவரவர் வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. காலை 7.50 மணிக்கு பரமத்தியில் இருந்து புறப்படும் 9 ஜி என்ற அரசு பஸ் மேற்கண்ட கிராமங்கள் வழியாக காலை 8.15 மணிக்கு பள்ளிக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு வருகிறது. அதேபோல் மாலையில் பள்ளி முடிந்ததும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் வசதியில்லாததால் தனியார் பஸ்களில் தொங்கியபடி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. அல்லது நாமக்கல்லில் இருந்து பரமத்தி செல்லும் 9 ஜி அரசு பஸ் இரவு 7.30 மணிக்கு பஸ் ஸ்டாப்பிற்கு வந்த பின்னர் அந்த பஸ்சில் தான் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. வகுப்பு முடிந்து இரவு 7.30 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் மாணவியர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருப்பதால் மாணவியர் அச்சத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் பஸ் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவ மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: காலை நேரத்தில் பரமத்தியில் இருந்து நாமக்கல் வரை அரசு பஸ் வசதி இருப்பது போல், மாலை நேரத்தில் பஸ் வசதியில்லை. அதனால் குழந்தைகள் வீடு வரும் வரை அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது. பரமத்தி வழியாக செல்லும் ஒரு சில தனியார் மற்றும் மினி பஸ் வசதி இருந்தாலும், அவை குறிப்பிட்ட நேரத்தில் இல்லை. எனவே மாலை நேரம் பள்ளி முடிந்ததும் அரசு பஸ் விட ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.