கல்வி கட்டணம் குறைப்பு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்
புதுச்சேரி: கோரிக்கையை ஏற்று, உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு, சட்டக் கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.750 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த கல்விக் கட்டணம் ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது. கல்விக் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினத்திலிருந்து சட்டக் கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளான நேற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த வந்தனர். பெரியகடை இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், சப் இன்ஸ்பெக்டர் சஜித் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிற்பகல் 1.00 மணியளவில், முதல்வர் ரங்கசாமியிடம், கல்விக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என மாணவர்கள் மனு கொடுத்தனர். முதல்வர், கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்கிறேன் என்று கூறினார். மாணவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் குறைக்க சொல்லி வற்புறுத்தியதால், ஆண்டிற்கான கல்வி கட்டணம் ரூ. ஆயிரம் என்று நிர்ணயம் செய்வதாக அறிவித்தார். கல்விக் கட்டணத்தை குறைத்த முதல்வருக்கு, சட்டக் கல்லுாரி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.