அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம், காம்பவுண்ட் சுவர் அமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி: விளம்பார் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் மற்றும் காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தென்கீரனூர், விளம்பார், காட்டனந்தல், லட்சியம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கின்றனர். மத்திய அரசின் ஆர். எம்.எஸ்., (அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம்) திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட விளம்பார் உயர்நிலைப் பள்ளிக்கு 11 வகுப்பறைகள், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 3 கழிப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவ, மாணவிகள் விளையாட்டுகளில் பங்கேற்கும் திறன் குறைகிறது. கட்டடத்தை சுற்றிலும் மதில் சுவர் இல்லாமல் இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்த பள்ளி கட்டடத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான காலி இடத்தை விளையாட்டு மைதானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்று சுவரும் அமைக்க வேண்டும்.