இந்தியா - பாகிஸ்தான் பள்ளி மாணவர்களிடையே புதிதாக பூத்த நட்புறவு
புதுடில்லி: இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையேயான உறவில், பல விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளின் மாணவர்களுக்கு இடையே உறவு மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட பிஞ்சுகள் கொல்லப்பட்ட சோகம், அந்நாட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்னமும் உள்ளது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், 30 பேர், இந்தியாவுக்கு ஒரு வார சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். தலைநகர் டில்லி மற்றும் ஆக்ரா உட்பட, பல இடங்களை சுற்றிப் பார்த்த மாணவ, மாணவியர், பெரும்பான்மையான இடங்கள், தங்கள் நாட்டில் உள்ள இடங்கள் போலவே இருப்பதாக தெரிவித்தனர். நேற்று அந்த மாணவர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். அதுபோல, இந்தியாவிலிருந்தும், 30 மாணவ, மாணவியர், விரைவில் பாக்., செல்ல உள்ளனர். அங்கு பயங்கரவாதம் அதிகமாக இருப்பதை அறிந்த போதிலும், மாணவர்களும், ஆசிரியர்களும் அதுபற்றி கவலைப்படவில்லை. முன்னதாக, இருநாட்டு மாணவர்களும், பரஸ்பரம் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர். அதில் தங்கள் நட்பு, மகிழ்ச்சி, பயங்கரவாதத்திற்கு எதிரான உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.