அரசு பள்ளி மாணவர்கள் உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும்; எம்.பி., சிம்ஹா
மைசூரு: அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு, அறிவு குறைவு என்ற தவறான கற்பனை உள்ளது. இதை போக்கும் வகையில், மாணவர்கள் நன்றாக கல்வி பெற்று உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும், என பா.ஜ., எம்.பி., பிரதாப் சிம்ஹா அறிவுரை கூறினார்.மைசூரின், மஞ்சேகவுடன கொப்பலுவில் உள்ள, அரசு உயர் நிலைப்பள்ளியின், 25வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் எம்.பி., பிரதாப் சிம்ஹா பங்கேற்றார்.அவர் பேசியதாவது:அரசு பள்ளியில் படித்த விஸ்வேஸ்வரய்யா, உலக அளவில் புகழ் பெற்றார். அரசு பள்ளியில் படித்த அப்துல் கலாம், ஜனாதிபதியானார். அரசு பள்ளியில் படித்த பிரதமர் மோடி, நாட்டின் பிரதமரானார். இவர்களை போன்று பலர், அரசு பள்ளியில் படித்த பலரும், உயர்ந்த நிலையில் உள்ளனர் என்பதை, மறக்க கூடாது.செயின்ட் ஜோசப், மவுன்ட் கார்மலில் படித்தவர்கள் மிஸ் ஒர்ல்டு, மிஸ் யூனிவர்ஸ் ஆகலாம். ஆனால் நல்ல, நல்ல பதவியில் உள்ள பலர், அரசு பள்ளியில் படித்தவர்கள். நானும் கூட தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளி, மாஸ்டர் டிகிரி வரை அரசு பள்ளியில்தான் படித்தேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். அரசு பள்ளியில் படித்தால், அறிவு குறைவாக இருக்கும் என, தவறாக நினைக்காதீர்கள். ஆர்வத்துடன் படியுங்கள். மாணவர்கள் நன்றாக கல்வி பெற்று உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.