உயர்கல்விக்கு உதவ தொழில்துறையினர் தயார்! ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
திருப்பூர்: பிளஸ் 2 முடித்து உயர் கல்வி பயில வசதியில்லாதவர்களுக்கு உதவ, தொழில்துறையினர் தயாராக உள்ளனர் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.ஆரம்பக்கல்வியை அனைவரும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற அரசின் அறைகூவல் இன்றைய சூழலில் காலவதியாகிவிட்டது என்றே சொல்லலாம். பொருளாதாரம், தொழில், தொழில்நுட்பம் ஆகியவை அதிவேகமாக வளர்ந்து வரும் நம் நாட்டில், அடிப்படை கல்வி என்பது, பட்டப்படிப்பு, அதையும் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.பள்ளி படிப்பை கடந்து உயர்கல்வி என்பது தான், வாழ்க்கை பயணத்துக்கான ஏணிப்படி என்பதை, அரசு உரக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் தான், கல்லுாரி அளவில் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை துவக்கி, கல்லுாரி படிப்பு முடிந்தவுடன், எதிர்கால பொருள் ஈட்டலுக்கான வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.ஒவ்வொரு மாணவ, மாணவியரும், முதல்வர்களாக, கல்லுாரி படிப்பு அவசியம் என்பதை உணர்த்த, கல்லுாரி கனவு என்ற திட்டத்தையும் மாநில அரசு அறிவித்திருக்கிறது.அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரில் ஒருவர் கூட விடுபடாமல் உயர்க்கல்வி கற்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அவர்களுக்கு வழிகாட்ட, கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம்.மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சாய ஆலைகள் சங்கம் மற்றும் தொழிற்சாலைகள் சங்கம் உட்பட தொழில் துறையினர் பங்கேற்ற உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில், கலெக்டர் பேசியதாவது:குடும்பத்தில் நிலவும் நிதி நெருக்கடி, மாணவர்கள் மீதான குடும்பச்சுமை, உயர்கல்வி படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பது, உயர்கல்வி பயில பெற்றோர் அனுமதிக்காதது, தங்கள் குடியிருப்பின் அருகே கல்லுாரிகள் இல்லாதது என்பது போன்ற காரணங்கள் தான், 12ம் வகுப்பு முடித்தவர்கள், உயர்கல்விக்கு செல்லாமல் இருக்க காரணம்.இப்பிரச்னைகளில் இருந்து மீள்வது குறித்த ஆலோசனையை வழங்கி, மாணவ, மாணவியரின் கல்லுாரி கனவை நனவாக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர், உயர்கல்வி பயில்வதற்கு தேவையான உதவிகளை வழங்க, முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.