உள்ளூர் செய்திகள்

விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா கவர்னர் ரவி, துணை முதல்வர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையின், 14வது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழக திறந்தநிலை பல்கலையில் நேற்று நடந்தது.கடந்த 2022 - 23 மற்றும் 2023 - 24ம் ஆண்டுகளில் பட்டப் படிப்புகளை முடித்த 3,638 பேருக்கு, பல்கலையின் இணை வேந்தரும், துணை முதல்வருமான உதயநிதி முன்னிலையில், பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி பட்டங்களை வழங்கினார்.துணை வேந்தர் சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். பதிவாளர் லில்லி புஷ்பம் வரவேற்று பேசினார். இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை, பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார்.அவர் பேசியதாவது:நான் கடந்து வந்த பாதையை உங்களுடன் பகிர்வது, உங்களுக்கு ஊக்கமளிக்கும். தமிழகத்தின் ஒரு கிராமத்தில் போலீசாக இருந்த என் தந்தை, என் படிப்புக்காக சென்னைக்கு அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தார். என் ஒன்பதாவது வயதில், என் உடற்கல்வி ஆசிரியர் என்னை கூடைப் பந்தாட்டத்துக்கு தேர்வு செய்தார்.தொடர்ந்து, மண்டலம், மாநிலம், தேசிய போட்டிகளில் விளையாடிய நான், 13 வயதில் சீனியர் வீராங்கனையாக தேர்வானேன். என் சிறப்பான ஆட்டத்தால், 19வது வயதில் இந்திய அணியின் கேப்டனாகி, தொடர்ந்து அணியின் வெற்றிக்காக உழைத்தேன்.பல வெற்றி, தோல்விகளை சந்தித்தாலும், தோல்விகளில் இருந்து பாடம் கற்று, நம் கொடியை உயர்த்தி பிடிக்கும் வாய்ப்பை, என் தேசத்துக்கு தர வேண்டும் என்ற குறிக்கோள் தான் இருந்தது.நான் திருமணமாகி குழந்தை பெற்று, மீண்டும் விளையாட வந்த போது, ஒரு பெண்ணாக நிறைய சிரமங்கள் இருந்தன. அதை விட, என் தேசம் என் மீது வைத்த நம்பிக்கை பெரிதாக இருந்தது. அதனால், கடுமையாக உழைத்து, நம் அணியின் வெற்றிகளை உறுதி செய்தேன்.பட்டம் பெற்று, உடற்கல்வியியல் ஆசிரியராகவும், பேராசிரியராகவும் செல்ல உள்ள உங்களை வாழ்த்துகிறேன். அதேசமயம், நீங்கள் வெறும் விளையாட்டுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப் போவதில்லை.மாணவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களின் தவறுகளை களைந்து, நல்லனவற்றை கற்பித்து, அவர்களை நாட்டின் பெருமைமிகு வீரர் - வீராங்கனையாக மாற்ற வழிகாட்டப் போகிறீர்கள்.உடல் ஆரோக்கியம், சுகாதாரம், சுறுசுறுப்பு, குழுப்பணி, ஒற்றுமை, ஒழுக்கம் உள்ளிட்ட நடத்தைகளையும் நீங்கள் தான் கற்பிக்க போகிறீர்கள்.நீங்கள் பெற்றுள்ள இந்த பட்டம், உங்களின் மாணவர்கள் செல்லும் உயரத்தால் தான் பெருமை அடையும். ஒரு நாளும் உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் நிறுத்தி விடாதீர்கள். நாம் அனைவரும் தேசத்துக்காக விளையாட்டால் ஒன்றிணைவோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்