பட்டப்படிப்பு சான்றிதழ் கிடைக்காமல் தமிழக மாணவர் - மாணவி அவதி
பெங்களூரு: கோர்ஸ் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும், பட்டப்படிப்பு சான்றிதழ் கிடைக்காமல் தமிழகத்தின் இரண்டு மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தின் வேலுாரை சேர்ந்தவர்கள் விக்னேஷ், 25 ரக்ஷிதா பிரியா, 25. இவர்கள் பெங்களூரு பல்கலைக்கழகத்துடன் இணைந்த, ஹலசூரின் தனியார் கல்லுாரியில், 2017ல் பி.எஸ்.சி., படித்து வந்தனர்.இதில் குறைவான மாணவர்கள் படித்ததால், இருவரும் வேறு கல்லுாரிக்கு மாற்றப்பட்டனர். படிப்பை முடித்து நான்கு ஆண்டுகளாகியும், இவர்களுக்கு இன்னும் சான்றிதழ் கொடுக்காமல், புதிய கல்லுாரி நிர்வாகம் ஏதேதோ காரணம் கூறி இழுத்தடிக்கிறது.டேட்டா ஆப்பரேட்டர்பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாததால், விக்னேஷ், நல்ல வேலைக்கு செல்ல முடியாமல், டேட்டா ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார்.தன் பிளஸ் 2 வகுப்பின் சான்றிதழை காட்டி, பணிக்கு சேர்ந்துள்ளார். ரக்ஷிதா பிரியாவுக்கு வேலை கிடைக்கவில்லை. பட்டப்படிப்புக்கு தகுதியான, அரசு பணிக்கு விண்ணப்பிக்க அவரால் முடியவில்லை.இது தொடர்பாக, விக்னேஷ் கூறியதாவது:நானும், ரக்ஷிதா பிரியாவும், 2017ல் ஹலசூரின் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வந்தோம்.அந்த ஆண்டு வெறும் ஐந்து மாணவர்கள் இருந்ததால், நாங்கள், பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஹெச்.கே.இ.எஸ்., வீரேந்திர பாட்டீல் பட்டப்படிப்பு கல்லுாரிக்கு மாற்றப்பட்டோம்.நாங்கள் தமிழை இரண்டாம் மொழியாக தேர்வு செய்ததால், பிரச்னை ஆரம்பமானது. இந்த கல்லுாரியில் தமிழ் மொழி பாடங்களை நடத்த ஆசிரியர் இல்லை. விரைவில் ஆசிரியரை நியமிப்பதாக கல்லுாரி நிர்வாகம் கூறியிருந்தது.இதுவரை...கடந்த 2018ம் ஆண்டு நடந்த, 3வது செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை. நான்காவது செமஸ்டரில், நல்ல மதிப்பெண்கள் பெற்றோம்; பட்டியலும் கிடைத்தது. கடந்த, 2020ல் படிப்பை முடித்தோம். ஆனால், இதுவரை, மூன்றாவது செமஸ்டர் மதிப்பெண் பட்டியலை தரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.ரக்ஷிதா பிரியா கூறியதாவது:நாங்கள் பலமுறை பல்கலைக்கழகத்துக்கு சென்று கேட்ட போது, கல்லுாரியை தொடர்பு கொள்ளும்படி கூறினர். நடப்பாண்டு ஜூனில் கல்லுாரிக்கு சென்ற போது, சான்றிதழ் வேண்டும் என்றால் 25,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்கின்றனர்.எனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. நான் பட்டப்படிப்பை முடித்திருந்தும், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க அதற்கான சான்றிதழ் இல்லை. பிளஸ் 2 சான்றிதழை காட்டி, குறைந்த ஊதியத்துக்கு ஏதோ ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரி மழுப்பல்ஹெச்.கே.இ.எஸ்., கல்லுாரி அட்மிஷன் பிரிவு அதிகாரி பிரசாத் கூறியதாவது:மாணவர்களின் பிரச்னைகளை, கல்லுாரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அடுத்த வாரம் கல்லுாரிக்கு செல்லவிருக்கிறேன். பொதுவாக மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க, மேளா நடத்துவோம். அதில் மாணவர்கள் தங்களின் பிரச்னைகளை கூறலாம்.தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, மாணவர்களும் காரணம். அவர்கள் கோர்ஸ் முடித்தவுடன், எப்படியாவது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.