கல்வி உதவித்தொகைக்கான குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு 3 லட்சம் ரூபாயாக மாற்றியமைத்துள்ளது. தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் போன்றவற்றில் வருமான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர்.மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது. மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித் தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.