தரம் உயர்த்திய பள்ளிகளில் வசதி இல்லை: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
சிவகங்கை: தமிழகத்தில் 2020ம் ஆண்டு, 40 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி, 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள், 21 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்பட்டன.மேல்நிலைக்கல்வியில் ஒரு பள்ளிக்கு குறைந்தது, மூன்று பிரிவு கணிதம், அறிவியல், வரலாறு என்று வைத்துக்கொண்டால், ஆறு வகுப்பறைகள் வேண்டும். ஆனால் கூடுதல் வகுப்பறைகள் நான்காண்டுகளாக கட்டித் தரவில்லை.ஆறு முதல் பிளஸ் 2 வரை குறைந்தது 400 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் வகுப்பறை இல்லாமல் நுாலக கட்டடத்திலும், மரத்தடியிலும், பி.இ.டி., அறையையும் வகுப்பறைகளாக மாற்றி பாடம் நடத்துகின்றனர்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறியது:பள்ளிகளை தரம் உயர்த்தியதோடு சரி; கூடுதல் கட்டடம் கட்டி தரவில்லை. இட நெருக்கடியில் தான் மாணவர்கள் படிக்கின்றனர். பரிசோதனைக் கூட வசதியும் கிடையாது. நான்காண்டுகளாக செய்முறை பயிற்சி இல்லாமலேயே மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளது. இதனால் கல்வித்தகுதி பாதிப்படைகிறது. எனவே, தமிழக அரசு தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும், பரிசோதனைக் கூடங்கள், கணினி வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.