உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான பயணம் திருத்தணியில் தொடரும் அட்டகாசம்

திருத்தணி: திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரிக்கு செல்லும் பெரும்பாலான மாணவர்கள் திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, 5 கி.மீ., துாரம் உள்ள அரசு கல்லுாரிக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வாயிலாக சென்று வருகின்றனர்.மாணவர்கள் வசதிக்காக, காலை 8:30 மணி முதல், காலை 10:30 மணி வரை, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், 12க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் அரசு கல்லுாரி வரை இயக்கப்படுகின்றன.இருப்பினும், மாணவர்கள் ஆபத்தான நிலையில், பேருந்தின் படியில் நின்றும், கூரையில் அமர்ந்தும், ஜன்னல் கம்பிகள் பிடித்து தொங்கியப்படியும் ஆபத்தான பயணம் செய்கின்றனர். குறிப்பாக, பேருந்தில் போதுமான இடமிருந்தால், சில மாணவர்கள் பேருந்துக்குள் செல்லாமல் படியில் நின்று தொங்கியபடி பயணம் செய்கின்றனர். பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் பலமுறை மாணவர்களை படியில் நின்று பயணம் செய்யக்கூடாது என, எச்சரித்தும் பலனில்லை.பேருந்து படிகளில் தொங்கிய படி மாணவர்கள் செய்யும் போது விபத்தில் சிக்கி பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இருப்பினும் மாணவர்கள் தற்போதும் பேருந்து ஜன்னல்கள் பிடித்து தொங்கியப்படியும், அவர்கள் மீது ஏறி நின்றும் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.எனவே அசம்பாவிதம் நடக்காத முன் போலீசார், பேருந்துகளில் தொங்கியப்படி ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, திருத்தணி போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு கல்லுாரி மாணவர்கள் வசதிக்காக, 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் காலியாக செல்லும் பேருந்துகளில் ஏறிச் செல்லாமல் அவர்களது நண்பர்கள் எல்லோரும் ஒரே பேருந்தில் பயணம் செய்வது, படி மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கி செல்வது, 'கெத்து' என நினைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.இதை கண்டிக்கும், ஓட்டுநர், நடத்துநர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், கல்லுாரி மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு எங்கள் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்