பி.எம்.ஸ்ரீ., பெயர்தான் பிரச்னையாம்! திட்டத்தை தமிழக அரசு மறுப்பதற்கு பின்னணி இதுதான்
சென்னை: சி.பி.எஸ்.இ.,யை விட அதிக தரத்தில் இலவச கல்வி வழங்க முன்வந்தால், அதில் கூட அரசியல் செய்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது முக்கியமில்லை.அதில் எங்கள், லேபிள் இருக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் அடம்பிடிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் குற்றம்சாட்டியுள்ளார். இதனாலேயே, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை, தமிழக அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக சாடியுள்ளார்.பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில், தமிழக அரசு கையொப்பம் இடாததால், சமக்ர சிக்ஷா நிதி வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.இல்லம் தேடிக் கல்விதேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் எனக்கூறும் தமிழக அரசு, அதன் ஒரு பகுதியான, இல்லம் தேடி கல்வி; எண்ணும் எழுத்தும்; ஹைடெக் லேப் உள்ளிட்டவற்றை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் மாதிரி பள்ளிகளை உருவாக்கும், பி.எம்.ஸ்ரீ., திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததால் சிக்கல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற மாதிரிப் பள்ளிகளுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், பிரதமர் பெயர் வைக்க வேண்டும் என்ற காரணத்தால், இதை மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, ஓய்வு பெற்ற, மாவட்டக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:எஸ்.எஸ்.ஏ., எனும் அனைவருக்கும் கல்வி இயக்கம், 8ம் வகுப்பு வரை எல்லோருக்கும் கல்வி வழங்கவும், ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் இடைநிலை கல்வி இயக்கம், 9, 10ம் வகுப்புகளை மேம்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது.இவற்றை இணைத்து, பிளஸ் 2 வரை தரமான கல்வி வழங்கவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும், சமக்ர சிக்ஷா அபியான் எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் அமல்படுத்தப்பட்டது.நவோதயா பள்ளிகள்இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022ல், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாட்டில், 14,500 பள்ளிகள் உருவாக்க, 27,360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இப்பள்ளிகள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளை போன்று, நேரடியாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், உட்கட்டமைப்பை உருவாக்கிய பின், பள்ளி நிர்வாகத்தை மாநில அரசுகளே நிர்வகிக்கும்படி விதிமுறைகள் உள்ளன.இதேபோன்ற கட்டமைப்பில், 15 ஆண்டுகளுக்கு முன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.தமிழகத்திலும், 44 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கும், பி.எம்.ஸ்ரீ., திட்ட பள்ளிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், பள்ளி பெயரில், 'பி.எம்.ஸ்ரீ' என இருக்க வேண்டும் என்பதுதான்.இப்பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான, மும்மொழிக் கொள்கை, 3, 5, 8ம் வகுப்புகளில் மதிப்பீடு செய்தல், பிளஸ் 2 வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு, தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.அருகே உள்ள பள்ளிகளும் பயன்படுத்திக்கொள்ள ஆய்வகம் உள்ளிட்ட தரமான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. மும்மொழியில், 'இந்தி கட்டாயம் அல்ல' என, மத்திய அரசு அறிவித்த பின், இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு, அதற்குப் பின் எதற்காக பின்வாங்கியது என தெரியவில்லை.பிரதமர் பெயரில், தரமான கல்வியை இலவசமாக வழங்கினால், அதன் பெயர், புகழ், பா.ஜ.,வுக்கு செல்லும் என நினைக்கின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது.ஹைடெக் கட்டமைப்புடன், தரமான கல்வி வழங்கும் பள்ளியை தடுப்பது ஏன் என புரியவில்லை. இதற்கு காரணமாக, மும்மொழி படிப்பதை, தமிழக மக்கள் யாரும் விரும்பவில்லை எனும் தோற்றத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.அப்படி இருப்பின், மும்மொழிக் கல்வி தரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் இருக்க வேண்டும்.மாறாக தமிழகத்தில் ஆண்டுதோறும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. பல லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தாமல் இன்று சி.பி.எஸ்.இ., படிக்க முடியாது. அதைவிட அதிக தரத்தில் இலவசக் கல்வி வழங்க முன்வந்தால், அதில் கூட அரசியல் செய்கின்றனர்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது முக்கியமில்லை. அதில் எங்கள், 'லேபிள் இருக்க வேண்டும் என, தற்போதைய ஆளுங் கட்சி அடம் பிடிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.திரிப்புதேசிய கல்விக் கொள்கையில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு, அசஸ்மென்ட் எனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதாவது தேர்வு நடத்தி, பெயில் செய்வது கிடையாது.அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப பயிற்சி அளிப்பது. தற்போதுகூட, 8ம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய அளவில் கற்றல் அடைவு மதிப்பீடு செய்யப்பட்டு தான் வருகிறது. இந்த மதிப்பீட்டை, பொதுத்தேர்வு என திரித்து பேசுகின்றனர்.பி.எம்.ஸ்ரீ., பள்ளியில் என்னென்ன வசதிகள்?இந்த பள்ளிகளில் கற்பித்தல் பணியை, 4 ஆக பிரித்துள்ளனர். அதன்படி அடிப்படைக் கல்வியாக கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஒன்று, இரண்டாம் வகுப்பு பாடங்கள் இருக்கும். 3 முதல், 5ம் வகுப்புகளுக்கு, விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை இருக்கும்.6 முதல், 8ம் வகுப்புக்கு, ஸ்மார்ட் லேர்னிங். இதில், கோடிங் உள்ளிட்ட கணினி திறன்கள் வளர்க்கப்படும். 9 முதல் பிளஸ் 2 வரை, தொழிற்கல்வி, விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இருக்கும். இந்த கல்வி முறைகளுக்கேற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நுாலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், கலைத்திறன்களை வளர்க்கும் வசதிகளோடு நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கேற்ற பசுமைக் பள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.