உள்ளூர் செய்திகள்

தேசிய கல்விக்கொள்கையில் புதுச்சேரி பல்கலை., முன்னோடி துணை வேந்தர் பேச்சு

புதுச்சேரி: தென் பிராந்திய பல்கலைகளில், தேசிய கல்விக்கொள்கையை, முதலில் புதுச்சேரி பல்கலை தான் நடைமுறைப்படுத்தியது என துணை வேந்தர் தரணிக்கரசு பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழக கல்வியியல் துறை, டில்லி தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகம் சார்பில், தென் பிராந்தியத்தில் ஆசிரியர் கல்வியில், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவது குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. பல்வேறு கல்வி நிறுவன டீன்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.நிறைவு விழாவில் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகலா வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) தரணிக்கரசு பேசுகையில், தென் பிராந்திய பல்கலைக்கழகங்களில், தேசிய கல்விக்கொள்கையை, முதன்முதலில் நடைமுறைபடுத்தியது புதுச்சேரி பல்கலைக்கழகம் மட்டுமே. குறிப்பாக ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி துவங்கியது மாபெரும் சாதனை முயற்சி. இந்த ஆசிரியர் கல்வி படிப்பு ஒரு சோதனை முயற்சி திட்டம் என்கின்றனர். ஆனால் ஒரு கல்வித்திட்டம் அல்லது புதிய படிப்பு அறிமுகம் செய்யும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இருந்தும் புதிய படிப்பை கைவிட முடியாது. மாறாக அதனை வெற்றிகரமாகவும், திறம்படவும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே பல்கலைக் கழகத்தின் இலக்கு என்றார்.பேராசிரியர் பிரணதி பாண்டா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்