பள்ளியில் படிக்கும்போதே வேலை வாய்ப்பு பயிற்சி; போட்டித்தேர்வுக்கு தயாராக புது திட்டம்
கோவை: அரசு பள்ளி மாணவர்கள், கணினி வழியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், வினாடி வினா அடிப்படையிலான மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.மாநில மதிப்பீட்டுப் புலம் திட்டத்தின் கீழ், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஹைடெக் ஆய்வகங்களில் கம்ப்யூட்டர் வழி திறன் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, மாணவர்களை போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் திறன் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்படுத்தும் வகையில், வினாடி வினா பயிற்சி மதிப்பீடு தேர்வு நடத்தப்படவுள்ளது. ஒரு பாடத்திற்கு 5 வினாக்கள் வீதம், 5 பாடங்களுக்கு மொத்தம் 25 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு, 30 நிமிடங்கள் நேரம் அளிக்கப்படுகிறது.பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு 5 வினாக்கள் வீதம், 6 பாடங்களுக்கு மொத்தம் 30 வினாக்கள் கேட்கப்படும்.மாவட்ட கல்வி அலுவலர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் செயல்படும், 165 அரசு பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகங்களில், மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது.பாட ஆசிரியர்களுடன் வகுப்பு ஆசிரியர்கள் இணைந்து, வினாத்தாள்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரித்த பின், மாற்ற இயலாது என்பதால், மிகுந்த கவனத்துடன் உருவாக்க வேண்டும் என பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளோம்.மதிப்பீடுகள் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளன. அதன்படி, முதல் கட்டம்: ஜூலை 7 முதல் 14 வரை; இரண்டாம் கட்டம்: அக்.,4 முதல் 11 வரை; மூன்றாம் கட்டம்: நவ., 3 முதல் 10 வரை மற்றும் இறுதியாக ஜனவரி 27ல் தேர்வு நடைபெறும்.இந்த சுழற்சி தேர்வுகள் வாயிலாக, மாணவர்கள், கணினி வழி போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.