கட்டி வைத்து அடித்ததாக சிகிச்சைக்கு வந்த கல்லுாரி மாணவர்கள் புகாரால் பரபரப்பு
ராசிபுரம்: சேலம் மாவட்டம், மல்லுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் மகன் தனுஷ், 21; இவர், பி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். ராசிபுரம் அடுத்த மலையாம்பாட்டியை சேர்ந்த, 18 வயது சிறுவன்; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று மல்லுாருக்கு வந்த சிறுவனை, அவரது வீட்டில் விடுவதற்காக, டூவீலரில் தனுஷ் வந்துள்ளார். நேற்று மதியம், வீட்டிற்கு வரும்போது பனங்காடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் தண்ணீர் வாங்கி குடித்துள்ளனர்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் மீது தனுஷ் மோதியுள்ளார். இதனால், கோபமடைந்த அந்த நபர், மாணவர்களிடம், எங்கிருந்து வருகிறீர்கள் என, கேட்டுள்ளார்.அவர்கள், ஊர் பெயரை சொன்னதும், குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பசங்களா நீங்கள் எனக்கூறி, அங்கிருந்த அடையாளம் தெரியாத இன்னும் சிலர் மாணவர்களை அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தனுஷின் பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை மீட்டு சென்றனர். மாணவர்கள் இருவரும், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற வந்தனர்.அவர்கள் கூறிய புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்தபோது, சம்பவம் நடந்தது மல்லுார் போலீஸ் ஸ்டேஷன் என்பதால், மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் மாணவர்கள் தகவல் தெரிவித்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.