உள்ளூர் செய்திகள்

காவலாளி, துாய்மை பணியாளர் இல்லை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவதி

சென்னை: தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், துாய்மை பணியாளர் மற்றும் காவலாளி பணிக்கு ஆட்கள் கிடைக்காததால், தலைமை ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இது குறித்து, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது;தமிழகத்தில், 3,200 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒரு பள்ளிக்கும், அரசு சார்பில் அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. நாங்கள், பள்ளி மேலாண்மை குழுவிடம் பேசி, பணியாளர்களை நியமிக்கிறோம். அவர்களுக்கு, மாதம் 3,000 ரூபாய் மாத சம்பளம் வழங்க, மேலாண்மை குழு ஒப்புதல் அளித்தது.ஆனால், அந்த சம்பளத்திற்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில், 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். பள்ளி வளாகமும் மிகப்பெரியதாக உள்ளது.நிறைய பிரிவுகள் உள்ளதால், வகுப்பறைகளும் நிறைய உள்ளன. இவற்றை சுத்தம் செய்ய, ஒருவரால் முடிவதில்லை.அதேபோல், கழிப்பறைகளை பள்ளி துவங்குவதற்கு முன், அவர்களால் சுத்தப்படுத்த முடிவதில்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று பணியாளர்களை பணியமர்த்த, பள்ளி மேலாண்மைக்குழு ஒப்புதல் அளிப்பதில்லை.இதேபோல், உதவியாளர், பாதுகாவலர் பணி களுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை.அதனால், வருகைப்பதிவேடை எடுத்துச் செல்வது, ஒவ்வொரு பாடவேளை முடிந்த பின் மணி அடிப்பது, தலைமை ஆசிரியர் வழங்கும் கோப்புகளை, ஆசிரியர்களின் அறைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, மாணவர்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.எனவே, பள்ளிக்கல்வித் துறை, பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்