குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்: குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நடப்பாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மனித குலத்துக்கு பயனளிக்கும் வகையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு உலகின் உயரிய விருதான இந்த பரிசு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் மூவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. குவாண்டம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு வழங்கப்பட உள்ளது.இந்த அறிவிப்பின் படி, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த, ஜான் கிளார்க், மைக்கேல் எச். டேவோரெட் மற்றும் ஜான் எம். மார்ட்டினிஸ் மூவரும் இப்பரிசை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.கண்ணுக்கு தெரியாத அணு துகள்களுக்குள் நடக்கும் குவாண்டம் விளைவுகள், கண்ணால் காணக்கூடிய, கட்டமைக்கக் கூடிய அமைப்புகளுக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்தமைக்காக இவர்கள் மூவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை குவாண்டம் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது.இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை கணினிகளில் பயன்படுத்தும் போது, வழக்கமான கணினிகளால் தீர்க்க முடியாத சிக்கலான கணித சிக்கல்கள் விரைவாக தீர்க்க முடியும். தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பயன்படுத்தும் போது, ஹேக் செய்ய முடியாத பாதுகாப்பான இணைய பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.இவை மட்டுமின்றி, சுற்றுச்சூழலில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக் கூட துல்லியமாக அளவிட முடியும் என கூறப்படுகிறது.