காவலன் செயலியை பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு! ஸ்மார்ட் காக்கீஸ் வாயிலாக நடவடிக்கை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் ஸ்மார்ட் காக்கீஸ் வாயிலாக பெண்களிடம் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பெண் போலீஸ் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை புறநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் 'ஸ்மார்ட் காக்கிஸ்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அன்னூர் போலீஸ் ஸ்டேஷன்களில் மொத்தம் 6 ரோந்து நவீன பைக்குகளில், 12 போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்மையில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக புறநகர் பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்மார்ட் காக்கீஸ் வாயிலாக பெண்களிடம் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறியதாவது:பெண்களின் பாதுகாப்பிற்காக, ஸ்மார்ட் காக்கீஸ் வாயிலாக பொது இடங்கள், வீடுகள், அலுவலகங்களில் உள்ள பெண்களிடம் காவலன் செயலியை பதிவிறக்கும் செய்ய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்தும் போது, போலீஸ் ஸ்டேஷன் போலீசாருக்கு அலர்ட் வரும், இவர்களுக்கும் அலர்ட் வரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குற்றங்கள் தடுக்கப்படும். செல்போனில் டேட்டா, நெட்ஒர்க் என எதுவும் இல்லை என்றாலும் இச்செயலி செயல்படும்.இதுதவிர மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அன்னூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தலா ஒரு பெண் போலீஸ் வீதம் இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் பள்ளி, கல்லூரி, கடைகள், தொழில்நிறுவனங்கள் மற்றும் மலைவாழ் கிராமங்களுக்கு சென்று காவலன் செயலியை பெண்கள் பதிவிறக்கம் செய்வதை உறுதிப்படுத்துவார்கள்.யார் வேண்டுமானலும் எங்கு வேண்டுமானலும் செல்லலாம். பெண்கள் எங்கு சென்றாலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெப்பர் ஸ்பிரே, சிறிய கத்தி போன்றவைகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.பள்ளி சிறுமிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் மலை வாழ் கிராமங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வகையிலான குற்றங்கள் குறித்தும், அதை போலீசாரிடம் தெரிவிப்பது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.