உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பணிகளுக்கு ஐ.பி.பி.எஸ்., தேர்வு நடத்த கோரிக்கை

மதுரை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணிக்கு 3:1 பதவி உயர்வுடன், டி.என்.பி.எஸ்.சி., அல்லது ஐ.பி.பி.எஸ்., மூலம் நேரடித்தேர்வு நடத்த வேண்டும் என, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநிலப்பொதுச்செயலாளர் சர்வேசன் கூறியதாவது: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளராக (எழுத்தர்) சேர்பவர்கள் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளராகின்றனர்.இந்த பதவிக்கு பட்டப்படிப்புடன், கூட்டுறவுத்துறை சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு 3: 1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு மூலம் 3 பேரும்; நேரடி நியமனம் மூலம் ஒருவரும், என 2009ல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது வரை நேரடி நியமனம் மூலம் உதவி மேலாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது பதவி உயர்வு மூலம் உதவி மேலாளர் தேர்ந்தெடுக்காமல் நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.2010ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலான மாவட்ட வங்கிகளில் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேரடி உதவி மேலாளர் நியமனம், ஊழியர்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி விடும். மாவட்ட தேர்வு வாரியம் மூலம் நேரடி உதவி மேலாளர் நியமனம் நடைபெற்றால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். 3:1 என்ற நடைமுறையை ரத்து செய்து அனைத்து உதவி மேலாளர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.இல்லாவிட்டால் 2009 முறைப்படி ஒரு உதவி மேலாளர் பதவிக்கு மாநில தேர்வு வாரியம் அல்லது டி.என்.பி.எஸ்.சி., அல்லது வங்கிகளுக்கான ஐ.பி.பி.எஸ்., தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்