உள்ளூர் செய்திகள்

தேர்வுக்கு சென்ற மாணவர்களின் பூணுால் அகற்றம்; கல்லுாரி ஊழியர்கள் மூவர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில், சி.இ.டி., என்ற பொது நுழைவு தேர்வுக்கு சென்ற, ஐந்து மாணவர்களின் பூணுால் அகற்றப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக, தனியார் கல்லுாரி ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடகாவில் இன்ஜினியரிங், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்களுக்கு, சி.இ.டி., என்ற, பொது நுழைவுத் தேர்வு நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. இந்த தேர்வுக்காக பெங்களூரு மடிவாளாவில் உள்ள கிருபாநிதி கல்லுாரியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, ஆனந்த் சுதிர் ராவ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பூணுால் அணிந்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் பூணுாலை அகற்றிவிட்டு தேர்வு எழுத செல்லும்படி, கல்லுாரி ஊழியர்கள் சுதாகர், கிரிஜம்மா, சரிதா ஆகியோர் கூறியுள்ளனர்.'ஐந்து மாணவர்களும் பூணுால் தங்களது சம்பிரதாயம்; அதனை அகற்ற முடியாது' என்று கூறியும் ஊழியர்கள் கேட்கவில்லை. பூணுாலை அகற்றினால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம் என்று கறாராக கூறியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி ஐந்து மாணவர்களும் பூணுாலை அகற்றி விட்டு தேர்வு எழுதச் சென்றனர்.நீதிமன்ற உத்தரவுதேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றதும் பூணுாலை அகற்றியது பற்றி, பெற்றோரிடம் கூறினர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நேற்று காலை கிருபாநிதி கல்லுாரி முன் கூடினர். அவர்களுடன் ஹிந்து அமைப்பினரும் ஒன்று கூடி கல்லுாரி நிர்வாகம், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த ஆண்டும் சி.இ.டி., தேர்வு நடந்த போது, பீதர், ஷிவமொக்காவில் இரண்டு மாணவர்களின் பூணுால் அகற்றப்பட்டது சர்ச்சையானது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றது. பூணுாலை அகற்ற மாணவர்களுக்கு உத்தரவிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவையும் மீறி, தற்போது ஐந்து மாணவர்கள் பூணுால் அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லுாரி ஊழியர்கள் சுதாகர், கிரிஜம்மா, சரிதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்