புத்தகங்கள் படிப்பதால் தீய சிந்தனைகள் வராது: ஓய்வு பெற்ற பேராசிரியர்
பெங்களூரு: புத்தகங்களை தொடர்ந்து படிக்கும் போது, தீய சிந்தனைகள் வராது என்றும், புத்தகம் படிக்க வேண்டும் என்று எனது அப்பா எனக்குள் விதைத்த விதை, இன்று மரமாக வளர்ந்து உள்ளது எனவும், கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வந்த, ஓய்வு பெற்ற பேராசிரியர் தனராஜ் கூறினார்.பெங்களூரு கல்யாண் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் தனராஜ், 87. சிவாஜிநகர் குயின்ஸ் சாலை, 'தினமலர்' அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு நேற்று வந்தார். தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு அடங்கிய, 'கடல் தாமரை, அண்ணாவின் மாபெரும் தமிழ் கனவு' உள்ளிட்ட புத்தகங்களை ஆர்வமாக படித்தார்.பின், அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் வேலுார் என்றாலும், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரில் தான். பெங்களூரு இந்திய மேலாண்மை கழகத்தில் தான் படித்த போது அங்கு பயின்ற தாக்கம், பேராசிரியர் ஆக வேண்டும் என்று என்னை ஊக்குவித்தது. படித்து முடித்த பின் பல கல்லுாரிகளில் எம்.பி.ஏ., துறையில் பேராசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.பள்ளி படித்தது தமிழ் வழியில் தான். சிறுவயதில் இருந்தே கதைகள், கவிதைகள், கட்டுரைகள் விரும்பி படிப்பேன். புத்தகம் படிக்க வேண்டும் என்று, எனது அப்பா எனக்குள் விதைத்த விதை தான், இன்று மரமாக வளர்ந்து உள்ளது. பள்ளியில் படிக்கும் போது தடம் மாறிய வாழ்க்கையை மீண்டும் செம்மையாக்கியது புத்தகங்கள் தான்.சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் நல்ல மனிதனாக இருப்பது எப்படி என்று போதிப்பதும் புத்தகங்கள் தான். புத்தகங்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் நமது மனதிற்குள் தீய சிந்தனைகள் வராது. எனது வீட்டிற்கும், இந்த நுாலகத்திற்கும் 15 கி.மீ., துாரம். வந்து, செல்ல 30 கி.மீ., ஆகும்.ஆனாலும் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், பஸ்சில் ஏறி இங்கு வந்துவிட்டேன். நிறைய புத்தகங்கள் இங்கு உள்ளன. படிக்க தான் நேரம் தேவை. இங்கிருந்து மனதிருப்தியுடன் செல்கிறேன். இங்கு வருவோருக்கு நீங்கள் மலிவு விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யலாம் என்பது எனது கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.