பள்ளிக்கு பதில் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள்: ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி
மதுரை: மதுரையில் பள்ளி நேரத்தில் கல்வி அலுவலகங்களுக்கு அரசு ஆசிரியர்கள் சென்று வருவது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு 'கேக்' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நவ.10ல் பள்ளிகளில் 'கேக்' வினியோகிக்கப்படவுள்ளது. நவ., 13ல் மாணவருக்கு வழங்கப்படும். மூன்று நாட்கள் 'கேக்'கை பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக தொடக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதது தெரிந்தது. விசாரிக்கையில், ''பணி நிமித்தமாக பி.இ.ஓ., டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு சென்றுள்ளதாக'' கூறினர். 'பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் எப்படி வெளியே செல்லலாம்' என அதிகாரிகள் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது. அலுவலகங்களுக்கும் செல்லவும் அனுமதி இல்லை' என இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதையும் மீறி சிலர் சென்றிருந்தனர். தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சிலர் பி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்வதும், அங்கு ஆசிரியர் சம்பள 'பில்' தயாரிப்பது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதும் தெரிந்தது. அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.