காஞ்சி ஐ.ஐ.ஐ.டி-க்கு தாமதமாக கிடைக்கும் திறந்தவெளி பல்கலை அந்தஸ்து
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தற்போது அதற்கு திறந்தவெளி பல்கலை அந்தஸ்து அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா அவசர அவசரமாக பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கான தாமதம் ஏன் என்பது பற்றி சரியான விளக்கங்கள் அளிக்கவில்லை. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் அருகே கண்டிகை என்ற இடத்தில், &'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி&' என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு, &'இன்பர்மேஷன் டெக்னாலஜி&' எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும், &'டிசைன் அண்ட் மேனுபேக்சரிங்&' எனப்படும் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றுக்கான பட்டப்படிப்புகள் துவக்கப்பட்டன. இந்த மையம் 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மட்டுமின்றி, குவாலியர், அலகாபாத் போன்ற நகரங்களிலும் இது போன்ற மையங்களை மத்திய அரசு துவக்கியது. ஆனால், காஞ்சிபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்ட போதிலும், பல்கலை அந்தஸ்து அளிக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றது. நான்காவது ஆண்டான தற்போது, இறுதியாண்டை முடித்து விட்டு வெளியேறும் மாணவர்கள் மத்தியில் தங்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. பல்கலை அந்தஸ்து இல்லாமல் பெறப்படும், இந்த பட்டப்படிப்பு சான்றிழை வைத்துக்கொண்டு, வேறு எங்கும் மேற்கொண்டு படிக்க முடியுமா அல்லது இதை வைத்து வேலைக்கு சேருவதில் சிக்கல் வருமா என்ற பலத்த குழப்பங்கள் நிலவின. இதனால், கடந்த ஜூன் 20 ல், காஞ்சிபுரம் கல்வி நிறுவனத்திற்கு திறந்த வெளி பல்கலை அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை, மத்திய அரசு தயாரித்தது. இந்த அவசர சட்டத்தை இறுதி செய்யும் நோக்கில், வெள்ளிக்கிழமை(05-08-2011) லோக்சபாவில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி மையத்திற்கு திறந்தவெளி பல்கலை அந்தஸ்து அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை சபையில் தாக்கல் செய்வதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் புரந்தரேஸ்வரி அறிவித்தார். நாட்டின் பிற இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களுக்கு எல்லாம், எந்த சிக்கலும் இல்லாமல் பல்கலை அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மையத்திற்கு மட்டும் இழுத்தடிப்பு செய்யப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை. தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவிலும் கூட சில தொழில்நுட்பக் காரணங்களாலேயே திறந்தவெளி பல்கலை அந்தஸ்தை காஞ்சிபுரம் மையத்திற்கு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது. வேறு தெளிவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.