நாடு முழுவதும் புதிய மாதிரி கல்லூரிகள் அமைக்க யு.ஜி.சி. ஆர்வம்
அரசு, என்.ஜி.ஓ., பஞ்சாயத்துப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பிரச்னைகள் குறித்த பயிற்சி முகாமை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் துவக்கி வைத்து அவர் பேசியதாவது: சமூகப் பிரச்னைகளை எதிர்த்து மாற்றங்களை உருவாக்கவும், நலிந்தவர்களை மேம்படுத்தவும் தனிப்பயிற்சி அளிக்கும் சமூகப் பணிக் கல்லூரிகள் ஏராளமாக உள்ளன. சமூகக் குற்றங்களைத் தடுக்கும் பணியில் இதுபோன்ற கல்லூரிகளும், பொதுமக்களும் அரசுடன் பங்கேற்க வேண்டும். நாட்டில் 1947ல், 500 கல்லூரிகள், 25 பல்கலைகள் இருந்தன. உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் தற்போது 33 ஆயிரம் கல்லூரிகள், 609 பல்கலைகளாக அதிகரித்துள்ளன. பல்கலைகள் தற்போது சேர்க்கை மற்றும் தேர்வுகள் நடத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. உயர்தரக் கல்விக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 1.40 கோடியாக உள்ளது. 2020ல் இதன் எண்ணிக்கை 4.2 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்விளைவாக இந்த நிதியாண்டில் மத்திய திட்ட கமிஷனிடம் யு.ஜி.சி. சார்பில் ரூ.ஒரு லட்சத்து 84,740 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய கல்வி, பயிற்சிகளை தொடங்க முடியும். பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில், 18 முதல் 21 வயதுள்ள உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 20 சதம் அதிகரிக்கும் என, யு.ஜி.சி.எதிர்பார்க்கிறது. இதனால், உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட குறைவாக உள்ள 374 மாவட்டங்களில் "மாதிரி கல்லூரிகள்" அமைக்க உதவி செய்ய யு.ஜி.சி. தயாராக உள்ளது. மேலும், 20 மகளிர் பல்கலைக்கழகங்கள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.