பள்ளிகளில் நெறி சார்ந்த கல்வி காலத்தின் தேவை: நீதிபதி ராஜேஸ்வரன்
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நெறி சார்ந்த கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் நீதிபதி ராஜேஸ்வரன். சென்னை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பள்ளிகளில் பாடத்திட்டத்தில் நெறிசார்ந்த கல்வி சேர்க்கப்பட வேண்டும் என்றார். தற்போதையக் கல்வி முறையில் நெறிசார்ந்த கல்வி முறைக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. பள்ளிப் படிப்பு மாணவர்களிடம் நல்ல குண நலன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். நன்னெறிக் கல்வி பள்ளிகளில் கற்றுத்தரப்பட வேண்டும் என்றார் நீதிபதி ராஜேஸ்வரன். பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களை மூளைக்குள் திணிப்பது மட்டுமல்ல கல்வியின் வேலை. சமூகத்தில் ஒழுக்கமுள்ள மனிதர்களாக வாழவும் அது கற்றுத்தர வேண்டும். பரஸ்பர விவாதத்தின் மூலம் கல்வி கற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிக்க வேண்டும் என்பதில் மாணவர்களைப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் தெரிவித்தார்.