கல்விக்கடனை திரும்ப செலுத்தாத மாணவர்கள் போட்டோ வெளியீடு: வங்கி முற்றுகை
போடி: போடி ஸ்டேட் வங்கியில், கல்விக் கடன் பெற்று, திருப்பி செலுத்தத் தவறிய மாணவ, மாணவிகளின் போட்டோக்களுடன் பிளக்ஸ் போர்டு வைத்த, மேலாளரை கண்டித்து, அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வங்கியில் கல்விக் கடன் பெற்றவர்கள், படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போடி பாரத ஸ்டேட் வங்கியில், கடன் செலுத்த தவறியவர்கள் எனக் கூறி, கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் போட்டோ, பெயர், முகவரி, பெற்ற கடன், செலுத்த தவறி கடனுக்கான தொகை, ஆகியவற்றை அச்சிட்டு, வங்கி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. இதனால், மனம் உடைந்த மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கல்விக் கடனை விரைவில் செலுத்தி விடுகிறோம். பிளக்ஸ் போர்டு வைத்து அசிங்கப்படுத்த வேண்டாம்; அகற்றுங்கள் என பலமுறை மேலாளரிடம் தெரிவித்தும் அகற்றவில்லை. இச்சம்பவம் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக கூறி, அகில இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில், பொதுமக்கள் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் மற்றும் வங்கி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், போலீசார், பிளக்ஸ் போர்டை அகற்றினர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். வங்கி கிளை மேலாளர் முரளியிடம் கேட்ட போது, "கல்விக் கடன் பெற்றவர்களை திரும்ப செலுத்துமாறு, பல முறை அறிவித்தும் செலுத்தவில்லை. இதனால், அவர்களின் போட்டோக்களுடன் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது," என்றார்.