உள்ளூர் செய்திகள்

கட்டாய அபராதத்தை கண்டித்து தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சிவகங்கை: கட்டாய அபராதம் வசூலிப்பதை கண்டித்து சிவகங்கை அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் "ஸ்டிரைக்கில்" ஈடுபட்டனர். சிவகங்கை அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு, கல்லூரி பஸ்சில் வரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன் மாணவர்கள் "ஸ்டிரைக்கில்" ஈடுபட்டனர். அப்போது, சிலர் கற்களை வீசியதால் முதல்வர் அறை கண்ணாடி சேதமானது. சேதமான பொருட்களுக்கு ஒவ்வொரு மாணவரும் தலா ரூ.ஆயிரம் அபராதம் வழங்கவேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இறுதி ஆண்டு மாணவர்கள் கட்டிவிட்டனர். ஆனால், நேற்று கல்லூரிக்கு வந்த 3ம் ஆண்டு மாணவர்களிடம் அபராதத்தை கேட்டு கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதில், ஆத்திரமுற்ற மாணவர்கள் கல்லூரி முன் அமர்ந்து "ஸ்டிரைக்கில்" ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது: "அரசு ஒதுக்கீட்டில் படிக்கிறோம். போதிய ஆய்வக கருவிகள் இல்லை. குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. நிர்வாகத்தில் பல முறை தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன் யாரோ கண்ணாடியை உடைத்ததற்கு எங்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். இறுதி ஆண்டு மாணவர்கள் வேறு வழியின்றி அபராதத்தை கட்டினர். நாங்கள் தர மறுப்பதால் எங்களை அனுமதிக்கவில்லை" என்றனர். இக்கல்லூரி தலைவர் கூறுகையில், "ஸ்டிரைக்கின்" போது விலை உயர்ந்த கண்ணாடிகளை சேதப்படுத்தினர். இதில் ஈடுபட்டோர் பற்றி விசாரித்தோம். இனிவரும் காலங்களில் "ஸ்டிரைக்கில்" ஈடுபடமாட்டோம், கண்ணாடி சேதத்திற்கு காரணம் தெரிந்தால் அதற்கான அபராதம் செலுத்த சம்மதிக்கிறோம் என, எழுதி தர கேட்டோம். அதற்கு மறுத்து வகுப்பை புறக்கணித்துள்ளனர். பொருள் சேதத்தை உணர்த்தவே கேட்டோம் கட்டாய வசூல் செய்வது நோக்கம் அல்ல" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்