உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உணவு பழக்க வழக்கம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையை அடுத்த முள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு பழக்க வழக்கம் குறித்த விழிப்புணர்வு பயிற்சியை தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் வேர்ல்டு விஷன் இணைந்து நடத்தின. தமிழ்நாடு சுகாதார திட்ட டாக்டர் சுபாஷ்காந்தி, பள்ளி மாணவர்களுக்கான உணவு பழக்க வழக்கம் பற்றியும், தொற்றா நோய் பற்றியும் எடுத்துரைத்தார். நாம் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. தற்கால உணவு முறை, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாமல், நாகரிகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சத்தான காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் மற்றும் தானிய வகைகளை, தினசரி உணவில் கல்நது சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். இளைய தலைமுறையினர் கீரை, காய்கறிகளை தவிர்த்த உணவுகளையே சாப்பிடுகின்றனர். இயற்கை சத்து மிகுந்த உணவு பொருட்களை சாப்பிடுவதில், ஆர்வம் காட்டுவதில்லை. இயற்கை உணவுக்கு பதிலாக எண்ணெயில் பொறித்த தின்பண்டங்கள், பீட்சா, பர்கர், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், ரோட்டோரங்களில் விற்கப்படும் "பாஸ்ட் புட்" வகைகள், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். இது போன்ற உணவு பழக்க வழக்கங்களால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கண்பார்வை கோளாறு, ஞாபக மறதி போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர் என்று விளக்கமளித்தார். தொடர்ந்து இயற்கை காய்கறிகளை பார்வைக்கு வைத்தும், தொற்றா நோய்களை தடுக்க விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் பார்வையாளர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்