பள்ளியில், மேற் கூரை ஓடு உடைந்து ஆசிரியர், மாணவர்கள் காயம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேற்கூரை ஓடு உடைந்து, ஆசிரியரும், ஆறு மாணவர்களும் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மேலக்கொந்தை ரோட்டில் ஊராட்சி ஒன்றிய (வடக்கு) தொடக்கப் பள்ளி, ரயில்வே ஓடு கட்டடத்தில் இயங்குகிறது. 40 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று பகல், 12:30 மணிக்கு, உணவு இடைவேளையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அருகே புளிய மரத்திலிருந்து, காய்ந்த கிளை, காற்றில் முறிந்து, பள்ளி கூரை ஓட்டில் விழுந்தது. இதில், ஓடு உடைந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில், முதல் வகுப்பு மாணவர் அபுபக்கர் சித்திக், 6, நிவேதா, 6, இரண்டாம் வகுப்பு மாணவர் ஜெயக்குமார், 7, நான்காம் வகுப்பு மாணவர்கள் தேவா, 9, அபிமன்னன், 9, கபிலன், 9, ஆசிரியர் மோகன்தாஸ், 36, ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.