உள்ளூர் செய்திகள்

தென்மண்டல பல்கலை அளவிலான கூடைப்பந்து போட்டி; பாரதிதாசன் அணி வெற்றி

கேளம்பாக்கம்: தென்மண்டல அளவில் பல்கலை இடையேயான பெண்கள் கூடைபந்து போட்டியில், பாரதிதாசன் அணி வெற்றி பெற்றது. இந்துஸ்தான் பல்கலை சார்பில், தென்மண்டல அளவிலான, பல்கலைக்கழகங்களுக்கு இடையே பெண்கள் கூடைபந்து போட்டி, லீக் மற்றும் நாக்-அவுட் முறையில், வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து, 54 அணிகள் விளையாடி வருகின்றன. முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள், நவம்பர் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை, ராஜஸ்தானில் நடக்க உள்ள, அகில இந்திய பல்கலை இடையேயான கூடைபந்து போட்டியில் பங்கேற்கும். நேற்று நடந்த, முதல் ஆட்டத்தில், பெங்களூரு ஜெயின் பல்கலை அணி, 64-29 என்ற புள்ளி கணக்கில், காக்கிநாடா ஜெ.என்.டி.யூ., அணியை வீழ்த்தியது. அதில், ஜெயின் அணி வீராங்கனை, சிந்து அதிகபட்சமாக 17 புள்ளிகள் எடுத்தார். இரண்டாவது ஆட்டத்தில், திருச்சி பாரதிதாசன் அணி, 40-19 என்ற புள்ளி கணக்கில், ராணிசென்னம்மா அணியை தோற்கடித்தது. இதில், பாரதிதாசன் அணி வீராங்கனை, நந்தினி 10 புள்ளிகள் எடுத்தார். மூன்றாவது ஆட்டத்தில், பெங்களூரு வி.டி.யூ., அணி, 53-39 என்ற புள்ளி கணக்கில், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை அணியை வெற்றி கொண்டது. வி.டி.யூ., அணி வீராங்கனை சுஷ்மிதா , தன் அணிக்கு, 31 புள்ளிகளை பெற்று தந்தார். நான்காம் ஆட்டத்தில், பாரதியார் பல்கலை அணி, 60-34 என்ற புள்ளி கணக்கில், கிருஷ்ணா பல்கலை அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்