இடியும் நிலையில் அங்கன்வாடி - குழந்தைகளின் பெற்றோர் பீதி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளதால் அங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பீதியில் உள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியம் வேலாயுதபுரம் ஊராட்சிக்குட்பட்டது உடையநாதபுரம். இங்கு அங்கன்வாடி மையத்தில் 5 வயது வரையுள்ள 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு சத்து மாவு மற்றும் முட்டைகள் வழங்கப்படுகிறது. பழமையான இடியும் நிலையில் உள்ள கட்டடத்தில் இது செயல்படுகிறது. ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரை உடைந்து மழை காலத்தில் நீர் ஒழுகுகிறது. தரை தளமும், நடைபாதையும் பெயர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் பீதியில் உள்ளனர். மையத்தை சுற்றி முட்புதர்களும், கழிவு நீரும் குளம் போல் தேங்கி உள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகளை கடிக்கிறது. சுகாதாரமற்ற சூழ்நிலையில் உள்ளதால் இங்கு நான்கு குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு டாக்டர் சிகிச்சையளித்தார். எனவே அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும். அதற்கு முன்னதாக இந்த மையத்தை வேறு கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.