தஞ்சை தமிழ் பல்கலை வழங்கியுள்ள விருதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கு துவக்க விழா நடந்தது. நாணயவியல் தந்தை: விழாவுக்கு, தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை தாங்கினார். கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் ராசவேலு வரவேற்றார். பேராசிரியர் அதியமான், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தென்னிந்திய நாணயவியல் கழக செயலரும், முன்னாள் பேராசிரியருமான நரசிம்மமூர்த்தி, தொல்லியல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் சண்முகம், அப்பல்லோ மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் ராஜாரெட்டி, ரிசர்வ் வங்கி அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், தென்னிந்திய நாணயவியல் கழக நிர்வாகிகள், ஆய்வாளர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில், தமிழக நாணயவியல் ஆய்வுகளுக்கு பெரும் பங்காற்றியதற்காக, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவரும், தினமலர் நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, தமிழக நாணயவியலின் தந்தை என்ற விருது வழங்கி கவுரவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து, தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 25ம் ஆண்டு வெள்ளிவிழா கருத்தரங்கில் பங்கேற்பது, மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும், தமிழ் பல்கலைக்கழகம் விருது வழங்கி உள்ளதை, பெரும் பாக்கியமாக கருதுகிறேன். வட்டெழுத்து கற்றேன் தமிழ் எழுத்து சீர்மை குறித்து, பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தது. தமிழ் எழுத்துகளை சீரமைத்தால் என்ன என்ற எண்ணம், எனக்கு தோன்றியது. அதன் காரணமாக, தமிழின் தொன்மையான எழுத்துகளான தமிழ் பிராமி எழுத்துகளையும், வட்டெழுத்துகளையும் கற்றேன். ஒரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடு, நாணயங்கள் பெரிதும் உதவுகின்றன. தொன்மையான தமிழக நாணயங்கள் குறித்து, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பலர் ஆய்வுசெய்து, கட்டுரைகள் எழுதியுள்ளனர். சங்க கால மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களை, குறுநில மன்னர்கள் என்றும், அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் எழுதியுள்ளனர். மேலும், அக்காலக் கட்டத்தில், மவுரியப் பேரரசு மிக வலிமையாக இருந்ததால், அவர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை நாணயங்களை, தமிழக வணிகர்கள் பயன்படுத்தினர் என்றும் எழுதினர். இக்குழப்பங்களுக்கு, 1985ம் ஆண்டுதான் முடிவு ஏற்பட்டது. கோடை விடுமுறைக்காக, நான் கொடைக்கானல் செல்வது வழக்கம். 1985ம் ஆண்டு, மே மாதம் கொடைக்கானல் சென்றிருந்தேன். மாலை வேளையில், என் மனைவியுடன் கடைவீதிக்கு சென்றபோது, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், ஓலைச்சுவடிகள் இருப்பதை கண்டேன். தொன்மையான வட்டெழுத்துக்கள் குறித்து, நான் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளதால் அந்த ஓலைச் சுவடிகள், என்னை வெகுவாக கவர்ந்தன. அவற்றை பார்ப்பதற்காக, கடைக்குள் சென்றபோது, ஒரு தட்டில், பல பழைய நாணயங்கள் குவித்து வைத்திருந்ததை கண்டேன். ஆர்வ மிகுதியால், அந்த நாணயங்களை கிளறி பார்த்தபோது, ஒரு நீள் சதுர செப்பு நாணயம் தென்பட்டது. மிக பழமையான நாணயம் என்பதால், இந்த நாணயங்களை, எங்கு வாங்கினீர் கள்? என்று, கடைக்காரரிடம் கேட்டேன். குதிரை சின்னம்: அவர், மதுரையில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் தங்கையா நாடார் என்பவரிடம் வாங்கியதாக கூறினார். மதுரையில், அவரை தொடர்பு கொண்டபோது, முனிசாலையில் வசிக்கும் முகம்மது இஸ்மாயில் என்பவரது முகவரியை கொடுத்தார். அவர், ஆற்று மணலுக்குள் புதையுண்டு கிடக்கும் நாணயங்களை சேகரித்து வருவதாக கூறினார். சில நாணயங்களை என்னிடம் காட்டினார். அதில் ஒன்று, தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதை உணர்ந்தேன். நாணயத்தின் முன்புறத்தில் குதிரை சின்னமும், அதன்மேல், பெருவழுதி என்ற பெயரும் இருப்பதை கண்டேன். வழுதி சங்க கால பாண்டியர்களின் பட்டப் பெயர்களுள் ஒன்று. அவர்களில் சிறந்தவர், பெருவழுதி என அழைக்கப்பட்டனர். இவ்வாறாக, நாணயங்கள் சேகரிப்பதிலும், அவற்றை ஆய்வு செய்வதிலும், முழு முயற்சிகள் மேற்கொண்டேன். இதுகுறித்து, மேலும் ஆய்வுகள் செய்வதற்காக, தமிழ்நாடு நாணய வியல் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம் பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்தேன். இதையடுத்து, 1989ம் ஆண்டு தென்னிந்திய நாணயவியல் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் பேசினார். சோழர் கால செப்பேடு, முத்திரையின் நகலாக கேடயம் தஞ்சை தமிழ் பல்கலையில் நடந்த தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 25வது ஆண்டு வெள்ளி விழா கருத்தரங்கு நிகழ்வுகள்: * தமிழக நாணயவியல் ஆய்வுகளுக்கு, பெரும் பங்காற்றியதற்காக, தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவரும், தினமலர் நாளிதழ் ஆசிரியருமான டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், தமிழக நாணயவியலின் தந்தை என்ற விருதுக்காக வழங்கப்பட்ட கேடயம், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சோழர் கால செப்பேட்டில் உள்ள முத்திரையின் நகல். * கேடயத்தை, நாணயவியல் துறை ஆய்வாளர்களும், சோழ மண்டல கோவில் ஆய்வாளர்களுமான சந்திரசேகரன், சிதம்பரேஸ்வரர் ஆகியோர் தயாரித்து வழங்கினர். * விழாவில், தென்னிந்திய நாணயவியல் கழகம் சார்பில், தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை மற்றும் பேராசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. * தென்னிந்திய நாணயவியல் கழகத்துக்கு உதவியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். * தமிழக நாணயவியல் தொகுப்புகள் குறித்த நூல்கள் மற்றும் சிடி வெளியிடப்பட்டன. இவற்றை, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை வெளியிட, பேராசிரியர் சண்முகம், ரிசர்வ் வங்கி அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். * தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாணயவியல் ஆய்வாளர்கள், 150 பேர் பங்கேற்றனர்.