உள்ளூர் செய்திகள்

ஆபத்தை உணராமல், பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கல் பயணம்

திருப்பூர்: திருப்பூரில், ஸ்டாப்புகளுக்கு பதிலாக நடுரோட்டில் அரசு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், ஆபத்தை உணராமல், பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் மேற்கொள்கின்றனர். கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து துறையினரும், போலீசாரும் அலட்சியமாக உள்ளனர். பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிகள் பயணித்து, விபத்து நேரிட்டால், கண்டக்டர், வட்டார போக்குவரத்து துறையினர், போக்குவரத்து துறை அதிகாரிகளே பொறுப்பானவர்கள்; விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், மேற்கண்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வட்டார போக்குவரத்து துறையினரும், போலீசாரும் பின்பற்றாததால், பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி செல்வது, மீண்டும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காதர்பேட்டை பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் டவுன்ஹால் ஸ்டாப் வந்து, பஸ் மூலம் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்கின்றனர். இங்கு, நிழற்குடை ஓரிடத்தில் உள்ளது; பஸ்கள் வேறொரு இடத்தில் நிற்கின்றன. மாலை நேரங்களில், 500க்கும் அதிகமான மாணவர்கள், பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். சில டிரைவர்கள், மாணவர்கள் நிற்குமிடத்தில் பஸ்சை நிறுத்தி, ஏற்றிச் செல்கின்றனர். பல பஸ்கள், ஸ்டாப் உள்ள பகுதியில் ஒதுங்காமல், நடுரோட்டில் நிறுத்தியபடி, மாணவர்களை அவசரகதியில் ஏற்றிச் செல்கின்றன. இதனால், மாணவர்கள் ஓடி வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது; படிகளில் நின்றவாறு, ஆபத்தான சூழலில் மாணவர்கள் பயணிக்கின்றனர். செயல்படுகிறதா, குழு? கடந்த ஜன., 21ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்தை தடுக்க, மாநகர போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும். பஸ் படிக்கட்டில் பயணிக்கும் மாணவனின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரை அறிவிப்பாக மட்டுமே உள்ளது; திருப்பூரில் குழு அமைத்து, கண்காணிப்பு பணி துவங்கியதாக தெரியவில்லை. வடக்கு ஆர்.டி.ஓ., சிவகுருநாதனிடம் கேட்டபோது, "பஸ்களில் தொங்கல் பயணம் தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டவுன்ஹால் பகுதியில் ஆய்வு நடத்துகிறோம். போக்குவரத்து துறை ஊழியர் மீது தவறு இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தெற்கு ஆர்.டி.ஓ., பால்ராஜிடம் கேட்டபோது, "ஆய்வு நடத்தி வருகிறோம்; அரசு பஸ்கள் கண்காணிப்படும். ஓரிரு நாளில் மீண்டும் ஆய்வு நடத்துவோம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்