கோவை - அவினாசி ஆறுவழிச் சாலையில் நடைபாதை இல்லை!
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். கோவை மாநகரில் எண்ணற்ற பள்ளி, கல்லூரிகள் உள்ளன ; பல ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கோவை - அவிநாசி ஆறுவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், பாதுகாப்பாக நடந்து செல்ல சாலை யோரத்தில் நடைபாதை வசதியில்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் சாலையில் இறங்கி நடப்பதை தவிர வேறு வழி கிடையாது. மேலும், பள்ளி துவங்கும் நேரம், முடியும் நேரத்தில் அவிநாசி சாலையை ஒட்டியுள்ள பள்ளிகளின் முன் ஆட்டோ, வேன்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தவிர, சாலையை கடந்து மறுபக் கத்துக்கு செல்வதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது. எனவே, போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீஸ் துறையினர் இச்சாலையை நேரடி ஆய்வு செய்து, போக்குவரத்து குளறுபடிக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும், என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் எழுந்துள்ளது. மாணவ, மாணவியர் கூறியதாவது: பள்ளி முடிந்ததும் அவிநாசி சாலையில் நடந்து செல்ல பிளாட்பார்ம் வசதி கிடையாது. இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு, நடந்து செல்லும் போது அவ்வப்போது விபத்தில் சிக்கி பலரும் காயமடைகின்றனர். ஆறுவழிச் சாலை திட்டத்தை தயாரித்தவர்கள், பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்காமல் அலட்சியமாக விட்டு விட்டனர். இதனால், மக்கள் சாலையில் இறங்கி நடக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.