மருத்துவ படிப்பில் ஓ.பி.சி., ஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டிலும் இல்லை?
புதுடில்லி: மருத்துவப் படிப்பில், ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, நடப்பு கல்வியாண்டு முதலே, 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு நேற்று தெரிவித்தது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து, 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து, 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த இடங்களில், 50 சதவீதத்தை ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.விசாரணைஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும் படி உத்தர விட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி உத்தர விட்டது. மேலும், இது பற்றிய சட்ட வரையறைகளை, மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும் உத்தரவிட்டது.இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சமீபத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாவது: மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா... இது குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால், 27 சதவீதமாவது வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்., 16க்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், மத்திய அரசு சார்பில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், &'மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீட்டை, நடப்பு கல்வியாண்டில் வழங்க முடியாது&' என, கூறப்பட்டது.ஒத்திவைப்புஓ.பி.சி., இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்றும் விளக்கம்அளித்தது. இந்த வழக்கு தொடர்பாக, இரு தரப்பும் எழுத்துப்பூர்வ மான வாதங்களை, வரும், 20ல் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.