பாலஸ்ரீ விருது இறுதி போட்டி: சேலம் பள்ளி மாணவி தேர்வு
கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. அதேபோன்று, 9 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் படைப்புத் திறனை கண்டறிந்து சவகர் சிறுவர் மன்றம் மூலம் பாலஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.இவ்விருதுக்கான முதல் கட்ட தேர்வு, சேலத்தில் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த தென்மாநிலங்களுக்கு இடையேயான தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். அறிவியல் கண்டறிவு போட்டியில் சேலம் குளூனி மெட்ரிக் பள்ளி மாணவி தபுனா, டில்லியில் நடக்கும் இறுதி கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றார். தேர்வான மாணவியை கலெக்டர் சந்திரகுமார், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஹேமநாதன், குளூனி பள்ளி முதல்வர் நோரா, ஆசிரியை சுபா ஆகியோர் பாராட்டினர்.