உள்ளூர் செய்திகள்

நகம், பற்களை ஆயுதமாக பயன்படுத்துங்கள் முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை

துடியலுார் அருகே இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி துவக்க நாள் விழா நடந்தது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி கொடியேற்றி பேசுகையில், குழந்தைகளை நல்ல பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும். நல்ல ஒழுக்கமுள்ள நேர்மறை எண்ணங்களை விதைக்கக்கூடிய நல்ல கதைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தினமும் சொல்ல வேண்டும்.எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ கூடாது யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக் கூடாது என்பது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். வெறும் உயர்ந்த மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை மேன்மை அடையச்செய்யாது.ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதை வெளி கொண்டுவர ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பாலியல் தொந்தரவு ஏற்பட்டால், அதை எதிர்த்து போராடவேண்டும். ஒவ்வொரு குழந்தையும் கைவிரலில் குறைந்தபட்சம் மூன்று விரல்களில் நகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ரீதியான தொந்தரவு யாராவது கொடுத்தால் அவர்களை கைவிரல்களால் கீறியும், பற்களால் அவர்களை கடித்தும் தப்பலாம். இதை காந்தியடிகளே கூறியுள்ளார் என்றார்.விழாவில் 10ம் வகுப்பில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் பயின்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற உதவிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்