உள்ளூர் செய்திகள்

தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு: ஆசிரியர்கள் சங்கத்தினர் வரவேற்பு

நாமக்கல்: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், அனைத்து வகையான ஆசிரியர்களையும், சிறப்பு விதிகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டதற்கு, ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளது.இதுகுறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் வயது வரம்பை குறைத்து, கடந்த ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, பொது பிரிவினருக்கு, 45 வயதாகவும், இதர பிரிவினருக்கு, 50 வயதாகவும் குறைக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான வயதை அதிகப்படுத்த வேண்டும் என, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.இந்நிலையில், பொதுப்பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர, 53 வயதும், இதர பிரிவினர், ஆசிரியர் பணியில் சேர, 58 வயதாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கக் கூடிய படித்த இளைஞர்கள், 50 வயதுக்கு மேல் கடந்த மூத்த பட்டதாரிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது.ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு, தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இத்திட்டத்தை வரவேற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்