கல்லுாரிகளுக்கான அங்கீகார விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு
சென்னை: இன்ஜினியரிங், மேலாண்மை, ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளை நடத்தும் கல்லுாரிகளுக்கான அங்கீகார விதிகளில் மாற்றம் ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுதும் இன்ஜினியரிங் படிப்புகளான, பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., போன்றவற்றையும், மேலாண்மை படிப்புகளான பி.பி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் கணினி பயன்பாடு படிப்புகளான, பி.சி.ஏ., - எம்.சி.ஏ., போன்றவற்றையும் நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.ஏ.ஐ.சி.டி.இ.,யானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. புதிய கல்வி கொள்கையின்படி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகார விதிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை, www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும் கல்வியாண்டு முதல், புதிய அங்கீகார விதிகள் அமலுக்கு வர உள்ளன.அவற்றின் விபரம்:பி.சி.ஏ., மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவுகளுக்கு, கலை அறிவியல் கல்லுாரிகளும்; தொழில் திறன் கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். தற்போது ஆண்டுக்கு ஒரு முறை, அங்கீகாரம் வழங்கப்படும் நிலையில், இனி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் வழங்கப்படும்.புதிய கல்லுாரிகளுக்கு எளிதாக அங்கீகாரம் வழங்கப்படும். கல்லுாரிகளை மூடுவதற்கு பதில், அவற்றில் தேவையான வேறு படிப்புகளை துவங்க அனுமதி தரப்படும். இன்ஜினியரிங் கல்லுாரிகளை, பாலிடெக்னிக்குகளாகவும்; பாலிடெக்னிக்குகளை இன்ஜி., கல்லுாரிகளாகவும் மாற்றிக் கொள்ளலாம்.அதேபோல, ஆண்கள் கல்லுாரியை மகளிர் கல்லுாரியாகவும்; மகளிர் கல்லுாரியை ஆண்கள் கல்லுாரியாகவும் மாற்றலாம். மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைகள், மத்திய பல்கலைகள் போன்றவை, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமில்லை. ஆனால், ஏ.ஐ.சி.டி.இ., வழியாக வழங்கப்படும் சலுகைகளை பெற வேண்டுமென்றால், அங்கீகாரம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வரைவு அறிக்கையின் மீது, வரும் 17ம் தேதிக்குள் கல்வியாளர்கள், பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.