அரசு விடுதி மாணவர்கள் பழைய உணவு கட்டண ஒதுக்கீட்டால் அதிர்ச்சி!
மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளி கல்லுாரி விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தை முதல்வர் ஸ்டாலின் அதிகரித்து உத்தரவிட்டும் அத்துறைகள் சார்பில் பழைய உணவுக்கட்டணமே ஒதுக்கீடு செய்துள்ளதால் மாணவர்கள் காப்பாளர்கள் விரக்கதியடைந்துள்ளனர்.மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் ஆதிதிராவிடர் நலத்துறைகளின் கீழ் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லுாரி விடுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.இவர்களுக்கான உணவு செலவாக பள்ளி விடுதி மாணவர் ஒருவருக்கு மாதம் தலா ரூ.1000 கல்லுாரி விடுதி மாணவருக்கு தலா ரூ.1100 என அரசு நிதி ஒதுக்கியது. இந்நிதி ஒதுக்கீட்டை அரிசி பலசரக்கு காய்கறிகளின் விலைவாசிக்கு ஏற்ப அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் அக். 4ல் முதல்வர் ஸ்டாலின் பள்ளி விடுதி மாணவருக்கு ரூ.1400 கல்லுாரி விடுதி மாணவருக்கு ரூ. 1500 என உணவு கட்டணத்தை அதிகரித்து உத்தரவிட்டார். உடன் நடைமுறைக்கு வரும் என உறுதியளித்தார்.ஆனால் தற்போது செப்டம்பர், அக்டோபருக்கான உணவு கட்டணத்தை அத்துறைகள் சார்பில் பள்ளி கல்லுாரி விடுதிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் பழைய உணவு கட்டணம் அடிப்படையிலேயே நிதி வழங்கப்பட்டுள்ளதால் முதல்வர் உத்தரவை இத்துறைகள் மதிக்கவில்லையா. அல்லது வெறும் அறிவிப்பிற்காக முதல்வர் உணவு கட்டணத்தை உயர்த்தினாரா என சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து விடுதி காப்பாளர்கள் கூறியதாவது:பழைய உணவு கட்டணம்படி பள்ளி அளவில் ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு ஒதுக்கிய நிதி ரூ.33. இதன்படி ஒரு வேளை உணவுக்கு ரூ.11 ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தக்காளி வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது.ஆனாலும் ரூ.11க்குள் காலை சட்னி, சாம்பாருடன் டிபன் மதியம் சாம்பார், கூட்டு பொறியலுடன் சாப்பாடு இரவு டிபன் என வழங்க வேண்டும். ஏற்கனவே பல லட்சங்களை காப்பாளர்கள் தங்கள் கையில் இருந்து செலவிட்டு நொந்துபோயிருந்தனர்.யானை பசிக்கு சோளப்பொறி தான் என்றாலும் முதல்வர் உயர்த்தி உத்தரவிட்ட உணவுக் கட்டணத்தையாவது வழங்கி இருந்தால் ஆறுதலாக இருக்கும். தற்போது அதையும் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினர்.