உள்ளூர் செய்திகள்

துணை வேந்தர் நியமன விவகாரம் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை: தேடுதல் குழுவை நியமித்து கவர்னர் உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சென்னை பல்கலை துணை வேந்தர் நியமனம் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் என்பவர் தாக்கல் செய்த மனு:உயர் கல்வித்துறை, கடந்த செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சென்னை பல்கலை துணை வேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை அறிவித்தது. வேந்தரின் பிரதிநிதியாக பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் பிரதிநிதியாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, செனட் பிரதிநிதியாக டாக்டர் பி.ஜெகதீசன் ஆகியோர், தேடுதல் குழுவில் உள்ளனர். இதில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் பிரதிநிதி இடம் பெறவில்லை.யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இல்லாமல், தன்னிச்சையாக தேடுதல் குழுவை, மாநில அரசு நியமித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் இது உள்ளது. எனவே, உயர் கல்வித் துறை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் தீர்வு ஏற்படும் வரை, துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய முதல் பெஞ்ச், அதுகுறித்து கவர்னரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், &'&'தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் முன், கவர்னர் ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதி உள்ளார்.கவர்னர் நியமித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, ஜனவரி 23ல் விசாரணைக்கு வருகிறது. அதுவரை துணை வேந்தர் நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது, என்றார்.அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை, பிப்ரவரி 5க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்