தற்கொலைக்கு எதிரான சைக்கிள் விழிப்புணர்வு ஊட்டியில் மேற்குவங்க வாலிபருக்கு கவுரவம்
ஊட்டி: தற்கொலைக்கு எதிராக, சைக்கிளில் சென்று நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் மேற்குவங்க வாலிபருக்கு, ஊட்டியில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில், வணிகர் சங்கம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா கைகாதா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் பிசுவாஸ்,40. வியாபாரி. சைக்கிள் வீரரான இவர், கொரோனா நேரத்தில், போதிய வியாபாரம் இல்லாமல் இழப்பை சந்தித்துள்ளார். மனம் உளைச்சல் காரணமாக, இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்து நண்பர்களால் காப்பாற்றப்பட்டார்.மன அழுத்தத்தில் இருந்து விடுபட நண்பர்களின் ஆலோசனைபடி, நாடு முழுவதும், தோல்விக்கு தற்கொலை தீர்வல்ல, என்பதை வலியுறுத்தி, சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் இருந்து, கேரளா மாநிலம் சென்று, அங்கிருந்து, நீலகிரி மாவட்டம் கூடலுார் வழியாக நேற்று முன்தினம் ஊட்டிக்கு வருகை தந்தார்.தகவல் அறிந்த, ஊட்டி வணிகர் பேரமைப்பு தலைவர் முகமது பரூக் மற்றும் பிற வியாபாரிகள் பிங்கர் போஸ்ட் பகுதியில் சஞ்சை பிசுவாஸை சந்தித்து, அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவர், பிங்கர்போஸ்டில் தேசிய கொடி ஏற்றினார்.சஞ்சய் பிசுவாஸ் கூறுகையில், கொரோனா நேரத்தில் வியாபாரம் இல்லாமல் இழப்பு ஏற்பட்டதால், மன உளைச்சல் அடைந்தேன். இரு முறை தற்கொலைக்கு முயன்றேன். நண்பர்களால் காப்பாற்றப்பட்டேன். அதன்பின், அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ஊட்டிக்கு வந்த போது, வணிகர் சங்கத்தினர் என்னை கவுரவப்படுத்தியது மறக்க முடியாது, என்றார்.