நெல்லை பல்கலையில் பிஎச்.டி., படிப்பில் இட ஒதுக்கீடு முறை அமல்
திருநெல்வேலி: நெல்லை பல்கலையில் பிஎச்.டி., படிப்பு மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு மற்றும் கட்-ஆப் மார்க் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார்.துணைவேந்தர் சந்திரசேகர் கூறியதாவது:கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு பிஎச்.டி., படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாணவ, மாணவியர் பல்வேறு துறைகளில் பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.அதே நேரத்தில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியருக்கு வழிகாட்டி கிடைப்பதில்லை. பெரும்பாலான பேராசிரியர்கள் தங்களுக்கு, வேண்டியவர்களுக்கு மட்டும் வழிகாட்டியாக இருக்க சம்மதிக்கின்றனர்.இதனால் பெரும்பாலான மாணவ, மாணவியரால் தகுதி இருந்தும், பிஎச்.டி., படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் யு.ஜி.சி., இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த அறிவுரை வழங்கியுள்ளது. அதுபோல் தமிழக அரசும் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தி உள்ளது.இதன்படி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் இந்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு மற்றும் கட் ஆப் மார்க் அடிப்படையில் மாணவர்கள் பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.பிஎச்.டி., படிப்பில் மாணவர்கள் வழக்கபோல், நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். அதனை தொடர்ந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு முறை மற்றும் கட்ஆப் மார்க் அடிப்படையில் ஐந்து வழிகாட்டிகளை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் அந்த ஐந்து வழிகாட்டிகளில் ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம்.இவ்வாறு வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்கும் மாணவ, மாணவியருக்கு, வழிகாட்டிகளும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்க வேண்டும். பல்கலை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரி ஆராய்ச்சி மையங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.இந்த விதிமுறைகளை மீறும் வழிகாட்டிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தகுதியான மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு படிக்க வாய்ப்பு அதிகரிக்கும்.நெல்லை பல்கலையில் டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஆகிய பி.எஸ்சி., பாடங்கள் புதிதாக துவக்கப்பட்டன. இதில் மாணவர் சேர்க்கை நடந்தது. இந்த வகுப்புகள் இன்று (2ம் தேதி) முதல் சாந்தி நகரில் உள்ள பல்கலை கட்டடத்தில் நடக்கும்.இத்தகவலை துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார்.