உள்ளூர் செய்திகள்

பள்ளி கல்வித்துறைக்கு கூடுதல் நிதி கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வரவேற்பு

காங்கேயம்: பள்ளி கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரை போதிய ஆசிரியர் நியமனங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியர் பள்ளிகள் என்ற நிலையை மாற்றி வகுப்புக்கு ஒர் ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புகளுக்கு பாடத்துக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும்.50 குழந்தைகளுக்கு மேல் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் முழு நேர தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகள் முதற்கொண்டு உடற்கல்வி, வாழ்க்கைத் திறன் கல்வி, கணினி, இசை, ஓவியம் போன்ற கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி நிரந்தர ஆசிரியர் நியமிக்க வேண்டும்.தமிழக நிதிநிலை அறிக்கையில் உயர் கல்வித்துறைக்கு, 1,245 கோடி, பள்ளி கல்வித்துறைக்கு, 3,743 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. உயர்கல்வி பயிலும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க, 2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி வணிகத்தை வளர்ப்பதை காட்டிலும் தேவையான அளவுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் கூடுதல் பட்டப்படிப்புகளை உருவாக்க வேண்டும். அரசு பள்ளி, கல்லுாரிகளில் துப்புரவு பணியாளர், இரவு காவலர் போன்ற பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்