இனி இ - சேவை மையங்களில் எல்.எல்.ஆர்.,க்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: எல்.எல்.ஆர்., எனப்படும் ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெற, தமிழகத்தில் உள்ள அனைத்து இ - சேவை மையங்களிலும், இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:போக்குவரத்து துறையில், எல்.எல்.ஆர்., எனப்படும், வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் பிரவுசிங் சென்டர்களையும், பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில், தேவையற்ற செலவு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படை தன்மையும் இல்லாமல் உள்ளது. இந்த சேவைகளை பெற அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.எனவே, பொதுமக்களின் வீண் சிரமங்களை தவிர்க்கவும், சிக்கல்களை தவிர்க்கவும், அருகில் உள்ள இ - சேவை மையங்கள் வழியாக, இந்த சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுதும் உள்ள 55,000 இ - சேவை மையங்கள் வாயிலாக, எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களுக்கு அருகாமையிலுள்ள இ - சேவை மையங்கள் வாயிலாக இனி எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பிக்கலாம். சேவை கட்டணமாக 60 ரூபாய் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.,ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை வாயிலாக பொதுமக்கள் பெறக்கூடிய ஓட்டுனர் உரிமம், பர்மிட், உரிமம் மாற்றம் உள்ளிட்ட இதர சேவைகளையும் இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.