பண்ணைக்காடு பள்ளியில் குடிநீர் இல்லை பேரூராட்சி அலுவலகத்தை நாடும் மாணவர்கள்
பண்ணைக்காடு: பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் குடிநீர் தாகத்தை தணிக்க பண்ணைக்காடு பேரூராட்சி அலுவலகத்தை நாடும் அவலம் உள்ளது.பண்ணைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தரைப் பகுதிக்கு ஈடாக கோடை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாணவர்கள்அவதி அடைகின்றனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இருந்தும் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு அதை ஏற்பாடு செய்யாததால் பள்ளிக்கு எதிரே உள்ள பண்ணக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தண்ணீர் கேணில் மாணவர்கள் வரிசையில் நின்று தாகத்தை தணித்துக் கொள்கின்றனர். பள்ளிக்கும் பேரூராட்சி அலுவலகத்திற்கும் இடையே மெயின் ரோடு செல்வதால் இதை தாண்டியே மாணவர்கள் அவ்வப்போது குடிநீரை பருகுகின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதும் குறிப்பிடதக்கது. பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதியை வளாகத்துக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர் ஒருவர் கூறுகையில் , பள்ளிக்கு குடிநீர் இணைப்பு வசதி உள்ளது. இருந்தப் போதும் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கட்டமைப்பு பணி செய்வதால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் சீர் செய்து மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திற்குள் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.